இயற்கையைச் சுரண்டிதான் வளர்ச்சியா?

இயற்கையைச் சுரண்டிதான் வளர்ச்சியா?

கோவா மாநிலத்தில் சுரங்கத் தொழிலுக்கு விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை விலக்கியது. ஆண்டுக்கு அதிகபட்சம் 2 கோடி டன் அளவுக்கு மட்டுமே இரும்புத்தாது வெட்டியெடுக்கப்பட வேண்டும் என்று நிபந்தனையும் விதித்திருக்கிறது. மூன்று நீதிபதிகள் அடங்கிய ‘பெஞ்ச்’ இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கிறது. மேலும், “இந்தக் கனிம அகழ்வால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகள் அளவிடப்படும். அந்தத் தகவல்களின் அடிப்படையில் மேற்கொண்டு ஆராயப்படும்” என்றும் நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.

சுற்றுச்சூழலுக்காகச் சுரங்கத் தொழிலைத் தடைசெய்தால் இந்தத் தொழிலில் முதலீடு செய்தவர்கள், தொழிலாளர்கள் என்று சுமார் 1.5 லட்சம் பேரின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்று உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாமல் சுரங்கத் தொழிலை எவ்விதம் மேற்கொள்ளலாம் என்பது குறித்து அறிக்கை தயாரித்து ஆறு மாதங்களுக்குள் அளிக்குமாறும் கோவா மாநில அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

சுரங்கத் தொழிலில் நடைபெற்ற ஏராளமான முறைகேடுகளை நீதிபதி ஷா தலைமையிலான கமிஷன் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியிருந்தது. அந்த அறிக்கையை நிராகரிக்குமாறு, சுரங்கங்களின் குத்தகைதாரர்கள் தாக்கல்செய்த மனுவையும் அந்த பெஞ்ச் தள்ளுபடிசெய்தது. இந்தத் தீர்ப்புக்குப் பிறகு கடந்த 19 மாதங்களாக அமலில் இருந்த கனிம அகழ்வுத் தடை நீங்கிவிட்டது. இந்தத் தீர்ப்பை கோவா மாநில அரசும், சுரங்கத் தொழில்துறையினரும், தொழிலாளர் தரப்பினரும் வரவேற்றுள்ளனர். இதனால் மாநிலத்தில் முடங்கிய பொருளாதாரம் மீண்டும் துளிர்க்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் ஏற்பட்டிருக்கிறது.

இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தடையை விலக்கியிருப்பது வியப்பை அளிக்கிறது. கனிம அகழ்வால் சுற்றுச்சூழல் சீர்கெடும் என்பது உலகறிந்த உண்மை. அதே நேரத்தில், இந்தத் தொழிலால் பொருளாதார வளர்ச்சி ஏற்படுகிறது, வேலைவாய்ப்புகள் அதிகரிக்கின்றன என்பதும் உண்மை. இந்த இரண்டில் எது முக்கியம் என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் யார், நாடாளுமன்றமா, ஆட்சியாளர்களா, நீதித்துறையா, அல்லது சுற்றுச்சூழல் ஆர்வலர்களா?

இரும்புத்தாது மட்டுமல்ல நிலக்கரி, மங்கனீசு உள்ளிட்ட பல்வேறு சுரங்கத் தொழில்களுக்கும் ரசாயனத் தொழில்களுக்கும் சாயப் பட்டறைகளுக்கும் இதுதான் நிலைமை. தொழில் வளர்ச்சிக்காக கோவா போன்ற கடலோர மாநிலத்தில் இதை அனுமதித்தால் எதிர்காலத்தில் அந்தச் சுற்றுச்சூழல் எந்த அளவுக்குச் சீர்கெடும், அதற்கு நாம் தரும் விலையென்ன என்ற கேள்வியெல்லாம் எழுகிறது. இயற்கை வளங்களைச் சுரண்டுவதன் மூலம் ஏற்படும் பொருளாதார வளர்ச்சி தற்காலிகமானதுதான். ஒட்டுமொத்தமாகக் கணக்கிடும்போது வளர்ச்சியைவிட சீரழிவுதான் அதிகம். இந்தத் தொழிலால் அந்தந்தப் பகுதிகளிலுள்ள மக்கள் சுரண்டப்படுவதற்கு சத்தீஸ்கரின் நியமகிரி ஒரு எடுத்துக்காட்டு. ஆனால், நியமகிரி பிரச்சினையில் நீதிமன்றம் அந்தப் பகுதி மக்களின் நலனையும் சுற்றுச்சூழலின் நலனையும் கருத்தில் கொண்டே தீர்ப்பளித்தது.

உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பைப் பற்றி என்ன சொல்வது?

thanks to : tamil.thehindu.com

1 Comment to “இயற்கையைச் சுரண்டிதான் வளர்ச்சியா?”

  1. CDDVO5 kessvemlvdgu, [url=http://kwxplrlqfumt.com/]kwxplrlqfumt[/url], [link=http://rdnozafcnezd.com/]rdnozafcnezd[/link], http://oihsmavgbyyh.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news