இஸ்லாமிக் எமிரேட்ஸ் பெங்காஸியில் பிரகடனம்!!

இஸ்லாமிக் எமிரேட்ஸ் பெங்காஸியில் பிரகடனம்!!

லிபியாவின் 2-வது பெரிய நகரமான பென்காசியை கைப்பற்றியுள்ள இஸ்லாமிய இயக்கம், பென்காசியை ‘இஸ்லாமிய அமிரகம்’ (Islamic emirate) என பிரகடனம் செய்துள்ளது. அதே நேரத்தில், நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள தலைநகர் த்ரிபோலியை கைப்பற்றும் முயற்சியில், போட்டி தீவிரவாத இயக்கங்கள் தமக்கிடையே யுத்தம் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நாடு முழுவதிலும் ஏற்பட்டுள்ள பதட்ட நிலை காரணமாக, தலைநகரில் இருந்து வெளிநாட்டு ராஜதந்திரிகள் வெளியேறிக் கொண்டு இருக்கிறார்கள். ஒவ்வொரு நாடாக த்ரிபோலியில் அமைந்துள்ள தமது தூதரகங்களை மூடி வருகின்றன.

பென்காசி நகரை முற்றுகையிட்ட இஸ்லாமிய கடும்போக்கு இயக்கமான அன்சார் அல்-ஷரியா, அங்கிருந்த ராணுவத்தினரை துரத்திவிட்டு, நகரை முழுமையாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இந்த தாக்குதலின்போது, லிபிய ராணுவம் தமது முகாம்களை அப்படியே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டது.

ராணுவ முகாம்களில் இருந்த டாங்கிகள், விமான எதிர்ப்பு ஏவுகணைகள், ஆட்டிலரி பீரங்கிகள், ராக்கெட் லோஞ்சர்கள், மற்றும் பெட்டி பெட்டியாக ஏராளமான ஆயுதங்கள், அன்சார் அல்-ஷரியா இயக்கத்தினரின் கைகளில் ஓவர் நைட்டில் கிடைத்துள்ளன.

அதையடுத்து, பென்காசி நகரம் ‘இஸ்லாமிய அமிரகம்’ என பிரகடனம் செய்துள்ள அந்த இயக்கம், இன்று முதல் பென்காசி நகரில் இஸ்லாமிய சட்டம் (ஷரியா) அமல் படுத்தப்படும் என அறிவித்துள்ளது. இந்த சட்ட நடைமுறைகளை மீறும் பொதுமக்களை தண்டிப்பதற்காக, ஒவ்வொரு இடத்திலும் ஷரியா நீதிமன்றங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலையில் இருந்து, பென்காசி நகரின் வீதிகள் அனைத்தும் வெறிச்சோடிய நிலையில் காணப்படுகின்றன. அன்சார் அல்-ஷரியா இயக்கத்தினரின் ராணுவ வாகனங்கள் (இவை லிபயா ராணுவத்திடம் இருந்து கைப்பற்றப்பட்டவை) மட்டுமே வீதிகளில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுகின்றன.
இந்த அன்சார் அல்-ஷரியா இயக்கம், அமெரிக்காவால் பயங்கரவாத இயக்கம் என பிரகடனம் செய்யப்பட்ட அமைப்பு. பென்காசி நகரில் இருந்த அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டு, அமெரிக்க தூதர் கொல்லப்பட்டதை அடுத்து, அன்சார் அல்-ஷரியா இயக்கத்தை பயங்கரவாத இயக்க பட்டியலில் சேர்த்தது, அமெரிக்கா.

ISIS இயக்கம் ஈராக், மற்றும் சிரியாவில் தாம் கைப்பற்றிய இடங்களை இணைத்து ‘இஸ்லாமிய தேசம்’ என பிரகடனம் செய்துள்ள நிலையில், தற்போது அன்சார் அல்-ஷரியா இயக்கம் பென்காசியை ‘இஸ்லாமிய அமிரகம்’ என அறிவித்துள்ளது. அடுத்து என்ன வரப் போகிறதோ!

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news