நேதாஜி சந்திரபோஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார்- மதுரை ஐகோர்ட்டில் மனு

நேதாஜி சந்திரபோஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார்- மதுரை ஐகோர்ட்டில் மனு

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 41 கோப்புகளை பகிரங்கமாக வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி வக்கீல் வி.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார். அந்த மனு நீதிபதி எம்.வேணுகோபால் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக பாரதிய சுபாஷ் சேனாவின் ஒருங்கிணைப்பாளர் ஏ.அழகுமீனா (வயது 35) சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:–

கடந்த 23.1.1949 மற்றும் 1951, 1955 ஆகிய ஆண்டுகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பேசும்போது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உயிருடன் இருப்பதாக கூறினார். மேலும் 1962–ல் நடந்த இந்தியா–சீனா இடையேயான போரின் போதும் அவர் உயிருடன் இருந்துள்ளார். 1964–ல் நேருவின் இறுதிச்சடங்கிலும் அவர் பங்கேற்றிருந்தார்.

இதனையடுத்து கடந்த 4.8.1997–ல் நடந்த வழக்கு ஒன்றில் அலகாபாத் ஐகோர்ட்டு, ‘நேதாஜி இறந்ததாக கூறக்கூடாது, அவர் இந்தியாவுக்கு வரும்போது போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்‘ என்றும் உத்தரவிட்டது. அதேபோன்று பிரிட்டீஷ் பிரதமருக்கு 1945–ல் நேரு எழுதிய கடிதத்தில், நேதாஜியை ஒரு ‘போர் குற்றவாளி‘ என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் இருந்து 1946–ல் லண்டனுக்கு அனுப்பப்பட்ட தந்தி செய்தியில், ‘நேதாஜி உயிருடன் ரஷ்யாவில் இருக்கிறார்‘ எனக் கூறப்பட்டிருந்தது.

நேதாஜி ஒரு பிரம்மச்சாரி. அவருக்கு குழந்தைகள் கிடையாது. அனிதா போஸ் என்பவரை நேதாஜியின் மகள் என்கின்றனர். அனிதா போஸ் காங்கிரஸ் கட்சியால் உருவாக்கப்பட்ட கதாபாத்திரம். அவர் நேருவைச் சந்தித்திருக்கிறார். ஆனால், பசும்பொன் முத்துராமலிங்க தேவரை சந்திக்க வில்லை. நேதாஜியின் மகள் என்பதை நிரூபிக்க அனிதாபோஸ், மரபணு சோதனைக்கு சம்மதிப்பாரா?

நேதாஜி சந்திரபோஸ் இன்னும் உயிருடன் இருக்கிறார். அவரை, பாரதீய சுபாஷ் சேனாவின் தலைவர் அரவிந்த் பிரதாப்சிங், இந்த ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த தயாராக இருக்கிறார். நேதாஜி உயிருடன் இருப்பதற்கான புகைப்படங்கள், வீடியோ ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அவரை போர் குற்றவாளியாக நடத்தமாட்டோம் என்றும், இங்கிலாந்து அரசிடம் ஒப்படைக்க மாட்டோம் என்றும் மத்திய அரசு உத்தரவாதம் அளிக்கும்பட்சத்தில், அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்த தயாராக உள்ளோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீசு அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் இந்த மனு மீதான விசாரணையை அடுத்த மாதம் 5–ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news