காவி மயமாகிறதா கதர் தேசம்?

காவி மயமாகிறதா கதர் தேசம்?

இந்திய துணைக்கண்டத்தில் முன் எப்போதும் இல்லாத ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலோட்டமாகப் பார்த்தால் இந்த `அசாதாரணம்` எளிதாகப் பிடிபடாது. பாஜக தலைமையிலான ஆட்சி குறித்து கடந்த 3 மாதகாலமாக வெளிவரும் செய்திகளையும் அவை பற்றி எழும் விமர்சனங்களையும் விளக்கங்களையும் கூர்ந்து கவனித்தால் `அசாதாரணம்` பளிச்சென தெரியும்.

கடந்த 26 ஆம் தேதியன்று குடியரசு தினத்தையொட்டி மத்திய அரசின் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட அரசியல் சாசனம் குறித்த விளம்பரத்தில், அரசியல் சாசனத்தின் முகப்புரையில் இடம்பெற்றுள்ள ‘மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம்’ என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதனையடுத்து இது குறித்து தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சகம் அளித்த விளக்கத்தில், அரசியல் சாசனத்தில் 1976 ஆம் ஆண்டு செய்யப்பட்ட 42 ஆவது திருத்தத்தில்தான் மதச்சார்பின்மை, சோஷலிசம் என்கிற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன. ஆனால் விளம்பரத்தில் இடம்பெற்ற அரசியல் சாசன புகைப்படம், 42 ஆவது திருத்தத்திற்கு முன் இருந்த அரசியல் சாசனத்தின் ‘ஒரிஜினல்’ படம் என்றும், அதனால்தான் அதில் அந்த வார்த்தைகள் இடம்பெறவில்லை என்றும், முன்பு இருந்த முகப்புரையை மேன்மைப்படுத்தும் நோக்கில்தான் அந்தப் பழைய படம் விளம்பரத்தில் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்தியில் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே அதன் கொள்கையான இந்து மதத்தைத் தூக்கிப்பிடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகச் குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், இந்த விளம்பரம் வேண்டுமென்றே வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன. காங்கிரஸ்,கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ள போதிலும் மத்திய அரசு தனது பிடியில் உறுதியாகவே இருக்கிறது.

போதாதற்கு அரசியல் சாசன முகப்புரையிலிருந்தே மதச்சார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளே நீக்க வேண்டும் என சிவசேனா ஒருபுறம் குரல் எழுப்பி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் முதல்வர் பதவிக்காக தங்களின் 25 ஆண்டுகால ` இந்து நட்பை ` முறித்துக்கொண்ட பாஜகவும், சிவசேனாவும் மீண்டும் ஓரிழையாய் இணைந்து பிணைந்து செயல்படுவதை காட்டுகிறது சிவசேனாவின் கருத்து.

“அரசியல் சாசனத்தின் முகப்புரையில் இந்த வார்த்தைகள் சேர்க்கப்பட்டதிலிருந்தே இந்த நாடு ஒருபோதும் மதச்சார்பின்மை நாடாக இருக்க முடியாது என்று சொல்லப்பட்டு வருகிறது. இந்தியா மத அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டதாகவும், அதேப்போன்று பாகிஸ்தான் முஸ்லீம்களுக்காக உருவாக்கப்பட்டதாகவும், எனவே மீதம் இருப்பது இந்து ராஷ்ட்ராதான் என்று பாலாசாகேப் தாக்கரேவும், அவருக்கு முன்பே வீர் சர்வார்க்கரும் சொல்லி வந்தனர்” என்று கூறியுள்ளார் சிவசேனா கட்சியின் எம்.பி. சஞ்சய் ராவத்.

இந்நிலையில், சென்னை வந்த மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் “மதச்சார்பின்மை என்பது இந்தியர்களின் ரத்தத்தில் ஊறியது. மதச்சார்பின்மை மற்றும் சமத்துவத்தை பாஜக முழுமையாகக் கடைபிடித்து வருகின்றது” என்று கூறியிருக்கிறார்.

அதே போல மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ” மதச்சார்பற்ற நாடு என்று கூறுவதற்கு அந்த வார்த்தைகள் தேவையில்லை. அது இல்லாமலே மதச் சார்பற்ற நாடாக இருக்கலாம்” என்று கூறி எரிகிற நெருப்பில் மேலும் எண்ணெய் ஊற்றியிருக்கிறார்.

இது வெறும் வார்த்தை சம்பந்தப்பட்ட ஒன்று போலவும், பொருள் அற்றவை போலவும் அதிகார மையத்தில் அமர்ந்து இருப்பவர்கள் பேசுவது மேலும் பல சிக்கல்கள் உருவாகிட வழிவகுக்கும் என்பதே யதார்த்தம்.

உலகில் மதத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் நாடுகள் போல இந்தியாவும் இயங்க முடியுமா? இந்து என்ற ஒற்றைக் கருத்தாக்கம் ஒட்டுமொத்த மக்களின் மீது ஆட்சி செலுத்தும் ஆயுதம் ஆகுமா? என்ற கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.

கடந்த மாதம் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் பாஜக எம்.பி. மகராஜ், ‘கோட்சே சிறந்த தேசப் பக்தர்!’ என்றார். இந்துப் பெண்கள் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவேண்டும் என்றார். இன்னொரு எம்.பி. நிரஞ்சன் ஜோதி, பாஜக கட்சியினர் ராமரின் வழித் தோன்றல்கள் என்றார். அதே நேரத்தில் கோட்சேவுக்கு சிலைகள் வைக்கும் பணியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இது போன்ற சர்ச்சைகள் எழுவதை அவசியம் கவனித்தாக வேண்டும். அரசியல் சாசனத்தின் முகவுரை என்பது ஒரு நாட்டின் முகம் போல. அரசு எந்திரத்தின் முகவரி போல. அதில் மாற்றம் கொண்டுவருவது என்பது விளம்பரத்திற்காகச் செய்யப்படவில்லை. பத்திரிகை விளம்பரத்தில் செய்ததை நடைமுறையிலும் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியின் தொடக்கமாகவே தெரிகிறது என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.

காந்தியின் நினைவை போற்றும் பிரதமர் மோடி, தூய்மை பாரதம் திட்டம் கொண்டுவந்தார். அதை நாடு முழுக்க செயல்படுத்த கடும் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

பேச்சிலும் செயலிலும் காந்தியை நினைவுப்படுத்தி செயல்படும் அவர், ‘மத அடிப்படையில் மக்களைப் பிளவு படுத்தல் ஆகாது!’ என்று வாழ்நாள் முழுக்க செயல்பட்ட காந்தியின் இலட்சியத்தை சிதைப்பது எந்த வகையில் பொருந்தும்? என்பதுதான் தெரியவில்லை.

எளிமைக்கு மட்டும் காந்தி உதாரணம் இல்லை. ஒற்றுமைக்கும் அவர் சிறந்த உதாரணம்தான்.

2ஜி அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல்,ஆதர்ஷ் குடியிருப்பு ஊழல்,தாறுமாறான விலைவாசி உயர்வு , அடிக்கடி உயர்ந்த பெட்ரோல் டீசல் விலையேற்றம், உள்நாட்டு தொழில்களை மூழ்கடிக்கும் அந்நிய முதலீடுகள் என்று அடுக்கடுக்கான துயரங்களில், பிரச்னைகளில் இருந்து மீளவே பாஜகவை அமர வைத்தனர் மக்கள் என்றால் அது மிகை இல்லை.

இதனைத் தவிர்த்துவிட்டு, மத நலன் பார்த்துச் செயல்பட்டால் அது ஜனநாயகத்தைக் கேலி கூத்தாக்கி விடும்.

– தேவராஜன்

1 Comment to “காவி மயமாகிறதா கதர் தேசம்?”

  1. ywNgky znjeiqobtadp, [url=http://mbtwjvsbrxds.com/]mbtwjvsbrxds[/url], [link=http://cgwfiqukwpsw.com/]cgwfiqukwpsw[/link], http://cawbmgyqzneb.com/

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news