கடலில் கலந்த லிபிய அகதிகள் !!!

கடலில் கலந்த லிபிய அகதிகள் !!!

லிபியாவிலிருந்து வெளியேறிய நானூறு அகதிகள், கடந்த வாரயிறுதியில் அவர்களது படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி இறந்து போனதாக செய்திகளில் அறிவிக்கப்பட்டன. அந்த கப்பல் மூழ்கிய போது 550 பேர் வரையில் அதில் இருந்ததாக உயிர்பிழைத்தவர்கள் தெரிவித்ததை இத்தாலியின் சர்வதேச புலம்பெயர்ந்தோருக்கான அமைப்பின் ஒரு செய்தி தொடர்பாளர் Agence France-Presse க்கு தெரிவித்தார். இதுவரையில் சுமார் டஜன் கணக்கான சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த துயரகரமான சம்பவத்தின் அளவைக் குறித்த ஆரம்ப மதிப்பீடுகள் சரியானவை என நிரூபணமானால், இது, குறைந்தபட்சம் லாம்பெடுசா தீவிற்கு அருகில் படகு கவிழ்ந்து, சுமார் 360 புலம்பெர்ந்தவர்கள் நீரில் மூழ்கி இறந்துபோன அக்டோபர் 2013 சம்பவத்திற்குப் பிந்தைய மிகப் பெரிய உயிரிழப்புகளாக இருக்கும். மத்தியத்தரைக்கடலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்குமென நம்புவதற்கு அங்கே சிறந்த காரணம் உள்ளது.

உத்தியோகபூர்வ கணக்குகளின்படி, ஏப்ரல் 10 மற்றும் 13க்கு இடையில் மட்டும் குறைந்தபட்சம் 450 குழந்தைகள் உட்பட, மத்தியத்தரைக்கடலைக் கடக்க முயன்ற 8,500க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இந்த அகதிகளில் பெரும்பான்மையினர் லிபியா, சிரியா மற்றும் ஆபிரிக்காவின் போர் பகுதிகளில் இருந்து தப்பி வந்தவர்களாவர்.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவிற்கான Human Rights Watch இன் தற்காலிக துணை இயக்குனர் ஜூடித் சண்டர்லாண்ட் கூறுகையில், “அந்த செய்திகள் உறுதிப்படுத்தப்பட்டால், உலகின் மிக அபாயகரமான அந்த கடல்பரப்பில் புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் கோருவோர்களுக்கான சில மரணகதியிலான நாட்களில், கடந்த வாரயிறுதியும் ஒன்றாக ஆகிவிடும்,”என்றார். அகதிகளுக்கான ஐநா (UNHCR) உயர் கமிஷனரின் கருத்துப்படி, அந்த விபத்திற்கு முன்னரே இந்த ஆண்டு 500 வரையிலான புலம்பெயர்வோர் மற்றும் தஞ்சம் கோருவோர்கள் மத்தியத்தரைக்கடலில் உயிரிழந்துள்ளனர்.இந்த புள்ளிவிபரம் 2014 இல் அதே காலக்கட்டத்தின் போது பதிவான இறப்புகளை விட 30 மடங்கு அதிகமாகும். 2014 முழுவதிலும் 3,200 பேர் இறந்துள்ளதாக மதிப்பிடப்பட்டது. கடுமையான நிலைமைகள் நிறைய புலம்பெயர்வோர்களை வரவிருக்கும் மாதங்களில் கடல்களை நோக்கி வர ஊக்குவிக்கும் என்ற நிலையில், இறப்புகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிக்கும் என்ற மதிப்பீடுகளுடன் சேர்ந்து, இந்த எண்ணிக்கை இந்த ஆண்டில் இதுவரையில் 1,000க்கு நெருக்கத்தில் இருக்கும்.

வாரயிறுதி சம்பவத்தில் மீட்கப்பட்டவர்களில் பலர் இத்தாலிய ஊர்திகளிலேயே தங்க வைக்கப்பட்டனர், அதேவேளையில் ஏனையவர்கள் இத்தாலிய கடற்கரை ஓரத்தில் உள்ள ஏற்கனவே நெரிசல் மிகுந்த அகதிகள் முகாம்களுக்கும் மற்றும் அருகிலுள்ள தீவுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளனர்,அங்கே அவர்கள் சகிக்கவியலாத வாழ்க்கை நிலைமைகளை எதிர்கொண்டுள்ளனர். மத்திய கிழக்கில் இருந்து அகதிகள் சமீபத்தில் வெள்ளமென வருவது,அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் உறுப்பு நாடுகளால் நடத்தப்பட்ட குற்றகரமான போர்களின் நேரடி விளைவாகும்.

ஈராக், லிபியா மற்றும் சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க-தலைமையிலான இராணுவ நடவடிக்கைகளை முன்னனி ஐரோப்பிய அரசுகள் முழுமையாக ஆதரித்துள்ளதுடன், அவற்றில் பங்குபற்றியும் உள்ளன. மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகளால் இடைவிடாது நடத்தப்பட்டுவரும் இராணுவ தாக்குதல் கடந்த இரண்டு தசாப்தங்களில் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் பெரும் பகுதிகளைக் குழப்பங்கள் மற்றும் மோதல்களுக்குள் மூழ்கடித்துள்ளது.

2011 இல் அமெரிக்க-பிரெஞ்சு-பிரிட்டிஷ் குண்டுவீச்சு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, ஒரு மதிப்பீட்டின்படி, 2014 வரையில்,லிபியாவின் ஆறு மில்லியன் மக்களில் இரண்டு மில்லியன் பேர் அந்நாட்டிலிருந்து வெளியேறி இருந்தனர். அதற்கடுத்து சிரியாவின் ஜனாதிபதி பஷார் அல் அசாத்தை பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கு நடந்த மேற்கத்திய-தலைமையிலான பிரச்சாரம்,அந்நாட்டை உள்நாட்டு போருக்குள் மூழ்கடித்ததுடன், ஒரு மதிப்பீட்டின்படி அந்நாட்டிலிருந்து வெளியேற நான்கு மில்லியன் மக்கள் நிர்பந்திக்கப்பட்டனர்.

அவர்களில் பலர் அண்டை நாடான துருக்கிக்கு சென்றனர் ஆனால் ஏனையவர்கள், கடந்த வாரயிறுதி துயரத்தில் பலியான சிலர் உட்பட,ஐரோப்பாவிற்கு நம்பிக்கையற்ற பயணத்தை மேற்கொண்டனர். ஐரோப்பிய நாடுகளின் ஆதரவுடன் இப்போது அமெரிக்காவும் சவூதி அரேபியாவும், ஏமன் வரையில் போர்களத்தை விரிவாக்கி வருகின்றன. இந்த ஏகாதிபத்திய போர்வெறி, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் பெரும் அளவிலான அகதிகளை அவர்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற இட்டுச் சென்றுள்ளது. நம்பிக்கையிழந்த புலம்பெயர்வோர் அதிகளவில் ஐரோப்பாவில் தஞ்சம் கோருகின்ற நிலையில், ஐரோப்பிய ஒன்றியமோ, கடலில் உயிரிழப்பவர்களின் அதிகரித்துவரும் எண்ணிக்கை ஒருபுறம் இருக்க,நடைமுறையில் ஏனையவர்களை வராமல் தடுப்பதற்கு உதவும் வகையில்,மத்தியத்தரைக்கடலை புலம்பெயர்வோர் நுழைய-கூடாத பகுதியாக (no-go zone) மாற்றி வருகிறது.

2013 லாம்பெடுசா துயரத்திற்குப் பிந்தைய கூச்சல்களைத் தொடர்ந்து,இத்தாலி “எமது கடல்” (Mare Nostrum) என்றழைக்கப்பட்ட ஒரு தேடல் மற்றும் மீட்பு கடற்படை நடவடிக்கையைத் தொடங்கியது. நடைமுறையில் அந்த நடவடிக்கைக்கு கடல் மீட்சி எப்போதும் இரண்டாந்தர முக்கியத்துவமாகவே இருந்தது. லிபியா மற்றும் துனிசியாவின் கடற்கரையோரங்களில் இருந்து வரும் அகதி படகுகளைக் கண்டறிவதன் மூலமாக புலம்பெயர்வோர் இத்தாலிக்கு வருவதை தடுப்பதும் மற்றும் வடக்கு ஆபிரிக்காவிற்கு அவர்களைத் திருப்பி விடுவதுமே அந்த கடற்படை நிலைநிறுத்தலின் பிரதான நோக்கமாக இருந்தது. இருப்பினும் ஒரு மதிப்பீட்டின்படி அந்த திட்டத்தின் கீழ் 150,000 அகதிகள் மீட்கப்பட்டனர். Mare Nostrum நடவடிக்கை கடந்த நவம்பரில் கலைக்கப்பட்டு,ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லை கண்காணிப்பு நிறுவனமானFrontexஆல் நடத்தப்படும் மிகச் சிறியதும் மற்றும் சிறந்த வசதிகளைக் குறைவாக கொண்டதுமான Triton கண்காணிப்பு திட்டத்தைக் கொண்டு அது பிரதியீடு செய்யப்பட்டது.

Frontexக்கு வழங்கப்பட்டிருக்கும் பிரதான கட்டளையே தேடல் மற்றும் மீட்பு பணியல்ல, எல்லை கட்டுப்பாடாகும். இது,எந்தவொரு பயனுள்ள மீட்பு நடவடிக்கைகளையும் முடிவுக்குக் கொண்டு வரவும் மற்றும் கடலில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பதை அனுமதிக்கவும் ஐரோப்பிய அதிகாரிகளால் எடுக்கப்பட்ட ஒரு நனவுபூர்வமான முடிவாகும். செவ்வாயன்று ஐரோப்பிய கமிஷன், ஒரு “பரந்த புலம்பெயர்வு நிகழ்ச்சிநிரல்”என்றழைக்கப்படும் திட்டங்களைக் கொண்டு அந்த வாரயிறுதி படகு துயரத்திற்கு விடையிறுப்பு காட்டியது.

புலம்பெயர்பவர்கள் மற்றும் தஞ்சம் கோருபவர்கள் அவர்களது நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னதாகவே அவர்களை சிறையில் அடைக்கவும் மற்றும் மிரட்டவும், வடக்கு ஆபிரிக்க நாடுகளில் கடற்கரையோர முகாம்கள் அமைப்பதே அத்திட்டத்தின் மையத்தில் உள்ளது. “எல்லை கட்டுபாடு மற்றும் கட்டுப்படுத்தி வைக்கும் இயங்குமுறைகளை ஒப்பந்த சேவையில் வழங்குவது, வெளியேறுவதைத் தடுப்பதை” நோக்கிய ஒரு படியாகுமென அந்த முறைமைகளை ஓர் செய்தி மழுப்பலாக விவரிக்கிறது.

thanks to கைபர் தளம்

1 Comment to “கடலில் கலந்த லிபிய அகதிகள் !!!”

  1. Ho ho, who wodula thunk it, right?

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news