நாகப்பட்டினத்தில் பிரபாகரன் சிலை அகற்றம்

நாகப்பட்டினத்தில் பிரபாகரன் சிலை அகற்றம்

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் சிலை நேற்று இரவு அகற்றப்பட்டது. காவல்துறையினர் அகற்றியதாக பாமக கண்டனம் தெரிவித்துள்ளது. கிராமத்தினர் அவர்களாகவே அகற்றினர் என்கிறது காவல்துறை.
தெற்குப் பொய்கைநல்லூரில் வியாழக்கிழமையன்று திறக்கப்பட்ட பிரபாகரன் சிலை.

தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்தில், வியாழக்கிழமையன்று இந்த பிரபாகரனின் சிலை திறந்துவைக்கப்பட்டது. வலதுகையில் குதிரையின் கடிவாளத்தையும் இடதுகையில் துப்பாக்கியையும் வைத்திருப்பதுபோல, இந்தச் சிலை வடிவமைக்கப்பட்டிருந்தது.

அந்தக் கிராமத்திலிருக்கும் சேவுகராய அய்யனார் கோவிலில் இந்தச் சிலை வைக்கப்பட்டிருந்தது.

தெற்குப் பொய்கைநல்லூர் கிராமத்திலுள்ள 80 குடும்பங்களைச் சேர்ந்தவர்களால் 6 மாதங்களுக்கு முன்பாக இந்தக் கோவில் கட்டப்பட்டது.

வியாழக்கிழமையன்று இந்தச் சிலை திறக்கப்பட்டதும் அக்கம்பக்கத்து ஊரைச் சேர்ந்தவர்கள் பெரும் எண்ணிக்கையில் திரண்டு வந்து இந்தச் சிலையைப் பார்த்துச் சென்றனர். இந்த நிலையில், நேற்று நள்ளிரவில் இந்தச் சிலை அகற்றப்பட்டது.
நேற்று இரவில் பிரபாகரன் சிலை அகற்றப்பட்ட பிறகு எடுக்கப்பட்ட படம்.

இரவில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு, காவல்துறையினர் இந்தச் சிலையை அகற்றியதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

சிலை அமைக்கப்பட்டிருந்த நிலத்தின் உரிமையாளரிடமும் ஊர் மக்களிடமும் தாங்களே சிலையை அகற்றிவிட்டதாக காவல்துறையினர் மிரட்டி எழுதி வாங்கியிருப்பதாகவும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவிடம் கேட்டபோது, காவல்துறைக்கும் சிலை அகற்றப்பட்டதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்தார்.

ஊர்க்காரர்கள் தவறுதலாக பிரபாகரன் சிலையை வைத்துவிட்டதாகவும், பிறகு அவர்களே அதனை அகற்றிவிட்டதாகவும் காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது.

இது குறித்துக் கருத்துத் தெரிவிக்க தெற்குப் பொய்கை நல்லூர் கிராமத்தினர் யாரும் தயாராக இல்லை.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news