நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்வளை

நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்வளை

நெறிக்கப்படும் ஜனநாயகத்தின் குரல்வளை!

இன்றைக்கு வடமாநிலத்தின் அனைத்து ஊடகங்களும் அனைவருக்கும் அறிமுகமான பிரபலமான ஒரு மத போதகரை போட்டி போட்டுக் கொண்டு தீவிரவாதி தீவிரவாதி என அழைத்துக் கொண்டிருக்கின்றன. விவாதங்களில் கூட தீவிரவாதி பயங்கரவாதி என்ற பதம் மிகச் சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றது.

அவர் தான் டாக்டர். ஜாஹீர் நாயக். தமிழகத்தில் சகோ.பீஜே அவர்கள் எந்த அளவிற்கு மார்க்க எழுச்சியையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தினாரோ அதே அளவில் வட மாநிலங்களில் அதுவும் மதவெறி தலைவிரித்தாடும் மும்பை மாநகரில் மத நல்லினக்கத்தை ஏற்படுத்தி நீயும் நானும் ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் என்று சொல்லி மாற்று மத சகோதரர்களை அதிகம் அதிகம் அழைத்து நல்லினகப் பணியைச் செய்து வருகின்றவர் ஜாஹீர் நாயக்.

தமிழகத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்திய நேரம் தவ்ஹீத் பிரச்சார அறிஞர் சகோ.பீஜேவால் முன்னெடுக்கப்பட்ட இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் கேள்வி பதில் நிகழ்ச்சி எந்த அளவிற்கு தமிழகத்தில் மதவெறியை மாய்த்து காவி பயங்கரவாதத்தை நடுநிலை ஹிந்து மக்கள் உணர்ந்து கொள்ள பாதை அமைத்ததோ, அதேபோலத்தான் வடநாட்டில் உருது, மராட்டி, ஹிந்து மற்றும் ஆங்கிலம் பேசும் மாற்று மத சகோதரர்களுக்கு எதிரிகளால் தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்ட இஸ்லாத்தினைப் பற்றி மாற்று தெளிவாக அறிந்து கொள்ள டாக்டர்.ஜாஹீர் நாயக்கின் பிரச்சாரம் ஒரு வழிகாட்டியாய் விளக்கமாய் அமைந்தது.

மார்க்க விசயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைக்கும் ஜாஹீர் நாயக் அவர்களுக்கும் பல முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனால் தீவிரவாதம், மத நல்லிணக்கம் தொடர்பான விசயங்களில் ஜாஹீர் நாயக்கும் தவ்ஹீத் ஜமாஅத்தும் ஒன்றுபட்டே இருக்கின்றது. உலகம் முழுவதும் தீவிரவாதத்தை அழித்து நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தான் ஜாஹீர் நாயக்கும் பிரச்சாரம் செய்கின்றார் தவ்ஹீத் ஜமாஅத்தும் பிரச்சாரம் செய்கின்றது ஏன் ஒட்டுமொத்த இஸ்லாமியர்களும் இதைத்தான் பிரச்சாரம் செய்கின்றார்கள். ISIS பயங்கரவாதிகளை அழித்து ஒழிக்க வேண்டும் என்று தவ்ஹீத் ஜமாஅத் பிரச்சாரம் செய்கிறது, அதே பிரச்சாரத்தைத் தான் ஜாஹீர் நாயக்கும் செய்கின்றார்.

பல நாட்களாக ஜாஹீர் நாயக்கிற்கு குறிவைத்திருந்த காவி பயங்கரவாதிகள் இப்போது எதையோ எதனுடனோ தொடர்பு படுத்தி ஒரு மார்க்க பிரச்சாரகரை உலக மக்களால் மதிக்கப்படக் கூடிய ஒரு மத போதகரை தீவிரவாதிப் பட்டம் கொடுத்து மகிழ்ச்சியடைகின்றார்கள். மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி பிடிபட்ட பயங்கரவாதி சொன்னானாம், நான் ஜாஹீர் நாயக்கின் பிரச்சாரத்தைக் கேட்டுத்தான் வெடிகுண்டு வைத்தேன் என்று சொன்னானாம். இதுதான் ஜாஹீர் நாயக் தீவிரவாதி என்பதற்கு ஆதாரமாம். அடப்பாவிகளா!

சிகப்பு ரோஜாக்கள் என்று ஒரு சினிமா வந்தது. அதன் கதாநாயகன் பெண்களை மயக்கி கூட்டி வந்து கற்பழித்து கொலை செய்து தோட்டத்தில் புதைத்து ரோஜா செடிகளை நடுவான், அதுபோல நூறாவது நாள் என்று ஒரு படமும் வந்தது. அதன் கூத்தாடி நாயகன் தன் காதலியைக் கொன்று சுவற்றில் வைத்து புதைப்பான். இதை அப்படியே காப்பி செய்து ஆட்டோ சங்கர் என்பவன் 6 பேரைக் கொலை செய்தான். அவன் செய்த கொலைகள் ஏராளம் 6 பேர் தான் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு திரைப்படங்களைப் பார்த்து தான் நான் கொலையே செய்தேன் என வாக்குமூலம் கொடுத்தான் சங்கர்.

ஆனால் அதற்காக சிகப்பு ரோஜாக்கள் டைரக்டர் பாரதிராசாவையோ, நூறாவதுநாள் டைரக்டர் மணிவன்னனையோ அரசாங்கம் தீவிரவாதி என முத்திரை குத்தி கைது செய்யவில்லை ஏன்?. சக்திமான் என்று ஒரு ஹிந்தி சீரியல் வந்தது. ஆபத்தில் குழந்தைகளை சக்திமான் காப்பாற்றுவது போல அந்த சீரியல் வரும். இதைப்பார்த்து நம்மைக் காப்பாற்ற சக்திமான் வருவார் என்று நினைத்து 4 குழந்தைகள் மாடியில் இருந்து குதித்து செத்துப்போயின. இதற்கு காரணமான முகேஷ் கண்ணாவை தீவிரவாதி என்று முத்திரை குத்தி கைது செய்யாதது ஏன்?

ஷாம்னா என்ற பத்திரிகையை பால்தாக்கரே என்ற பயங்கரவாதி நடத்தி வந்தார். ஷாம்னா பத்திரிகையை ஒரு நடுநிலை ஹிந்துச் சகோதரர் 4 நாளைக்குப் படித்தால் போதும். 5 வது நாள் கண்ணில் படும் முஸ்லிம்களை வெட்டிச் சாய்த்து விடுவார். அந்த அளவிற்கு இஸ்லாமியர்களுக்கு எதிராக இன்று வரை விசம் கக்கி வரும் ஷாம்னா பத்திரிகை ஆசிரியரையோ அன்றைக்கு பால்தாக்கரேவையோ தீவிரவாதி கலவரத்தை தூண்டுகிறார் என முத்திரை குத்தி கைது செய்யாதது ஏன்?

இந்தியா முழுவதும் ர(த்)த யாத்திரை நடத்திய அத்வானியின் பிரச்சாரத்தைக் கேட்டு பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. பல ஆயிரம் முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டார்கள். அவரது பேச்சைக் கேட்டுத்தான் பயங்கரவாதம் செய்தார்கள் என்பது அரசுக்கும் காவல்துறைக்கும் உறுதியாகத் தெரியும் போது அத்வானியை பயங்கரவாதி என முத்திரை குத்தி கைது செய்யாயது ஏன்?

கோத்ராவில் வந்து நின்ற சமர்பதி ரயில் பெட்டி எண் 6. ஐ உள்ளுக்குள் நான்கு கதவுகளையும் பூட்டி தீவைத்து 59 கரசேவகர்களைக் கொலை செய்தார்கள் பயங்கரவாதிகள். அந்த இடத்தை பார்வையிட வந்த அன்றைய குஜராத் முதல்வர் மோடி, ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு என்று சொல்லி மக்களைத் தூண்டி விட்டார். அவரது பேச்சைக் கேட்ட நடுநிலை ஹிந்துக்கள் கூட முஸ்லிம்களின் மீது வெறியாட்டம் ஆடி 3000 முஸ்லிம்களை கொன்றொழித்தார்கள். அப்போது மோடியை தீவிரவாதி என்று அறிவித்து ஏன் கைது செய்யவில்லை?

ஆக இது போன்ற காதால் கேட்டும் காற்றிலே வரும் வாக்குமூலங்களெல்லாம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் தானா? பேய் ஆட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள் என்று அன்றே பாரதி பாடி வைத்தானே! அது இன்றைக்கு இந்தியாவில் நடக்கிறதா இல்லையா? மூவாயிரம் பேர் சாவுக்கு காரணமானவர் பிரதமராக இருக்கிறார், அவருக்கு கீழே பிணம் தின்னும் அகோரிச் சாமியார்கள் அமைச்சர்களாக இருக்கிறார்கள். இப்படி இருக்கும் ஒரு காவி தேசத்தில் நீதியை எதிர்பார்க்க முடியுமா? நியாயத்தை எதிர்பார்க்க முடியுமா?

மும்பைத் தாக்குதலை நடத்தி அந்த சத்தத்தில் ஹேமந்த் கர்கரேவைக் கொலை செய்தார்கள். அப்துல் கலாம் இறுதிச் சடங்கு என்று மூன்று நாள் மீடியாக்களில் ஒப்பாரி வைத்து அந்த சத்தத்தில் யாக்கூப் மேமனை தூக்கில் ஏற்றினார்கள். இப்போது ஜாஹீர் நாயக்கை குறிவைத்து என்ன செய்யப் போகிறார்கள்? பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வந்து விடலாம் என திட்டமிட்டிருக்கிறார்களா?

இதோ மக்கள் பேரியக்கம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தன்னுடைய முதல் குரலை ஜாஹீர் நாயக்கிற்கு ஆதரவாக பதிவு செய்துள்ளது. ஜாஹீர் நாயக் என்றைக்குமே தீவிரவாதத்திற்கு ஆதரவாக பேசியது கிடையாது, ரகசிய மீட்டிங் போட்டது கிடையாது. அவரது அனைத்து பேச்சுக்களையும் தாராளமாக ஆய்வு செய்யுங்கள். அவர் நடத்தும் கூட்டங்களில் 25% முஸ்லிமல்லாத மக்கள் தான் ஆர்வமுடன் கலந்து கொள்வார்கள். அதனால் தான் ஜாஹீர் நாயக்கின் இஸ்லாமிய நல்லிணக்கப் பிரச்சாரத்தால் வெறி கொண்ட காவிகள் அவருக்கு எதிராக காய் நகர்த்தி வருகின்றார்கள்.

ஜனநாயகத்தின் குரல்வளை நெறிக்கப்படுகின்றது. மதச் சுதந்திரம் பறி போகின்றது. இது நாடா இல்லை வெறும் காடா இதைக் கேட்க நாதி இல்லைத் தோழா என்ற கவிஞரின் வரிகள் சரியாகப் பொருந்திப் போகின்றது. தவ்ஹீத் ஜமாஅத் களமிறங்கியது போல நீதிக்கு எதிராக நியாயத்திற்கு எதிராக அனைத்து இஸ்லாமிய நடுநிலை மற்றும் இடதுசாரி அமைப்புகளும் களமிறங்க வேண்டும். கருத்துச் சுதந்திரமும் மதச் சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். தீவிரவாதிகள் பயங்கரவாதிகள் ஒழிக்கப்பட்டு இஸ்லாமியர்களும் ஹிந்துக்கள் சகோதர சகோதரிகளாக வாழ வேண்டும். இது தான் இந்திய இஸ்லாமியர்களின் ஆசை!

Leave a comment

Your email address will not be published.

*




Hit Counter provided by technology news