தமிழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள உருது, அரபி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி

தமிழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள உருது, அரபி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்! மனிதநேய மக்கள் கட்சி

தமிழகக் கல்லூரிகளில் காலியாக உள்ள உருது, அரபி பேராசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்!

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகளில் உருது, அரபி உட்பட சிறுபான்மையின மொழி துறைக்கான பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக பணி ஓய்வு, பதவி உயர்வு போன்ற காரணத்தால் காலியான பணியிடங்களை தமிழக அரசின் உயர்கல்வித் துறை இதுவரை நிரப்பாமல் உள்ளது.
ஏற்கெனவே சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் இரண்டு ஆண்டுகளாக காலியாக உள்ள அரபி பேராசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாத காரணத்தால் அக்கல்லூரியில் பயிலும் அரபி மாணவர்கள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். தற்போது சென்னை மாநிலக் கல்லூரியில் உள்ள உருதுத் துறைக்கான பேராசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படாத காரணத்தாலும், உருது துறை மூடப்பட உள்ளதாக உள்ள அச்சத்தாலும் அக்கல்லூரியில் உருது பயில விரும்பும் மாணவர்கள், பி.எஸ்.சி இயற்பியல் துறைக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.
மாநிலக் கல்லூரியில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடத்தை தற்காலிகமாக கௌரவப் பேராசிரியர்களைக் கொண்டு நிரப்பாமலும் கௌரவப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவர்களை நேர்காணலுக்கு அழைக்காமலும் உருதுத் துறையை முற்றிலுமாக தமிழக உயர்கல்வித் துறை புறக்கணித்து வருவது கண்டிக்கத்தக்கது.
சென்னை மாநிலக் கல்லூரி மற்றும் நந்தனம் அரசினர் கலைக் கல்லூரியில் உருது மற்றும் அரபி துறைகள் தொடங்கப்பட்டது தமிழக சிறுபான்மை மக்களின் வரலாற்றுடன் பின்னிப்பிணைந்து. ஆங்கிலேயர் காலத்தில் இயங்கி வந்த முஹம்மதியன் கல்லூரி விடுதலைக்குப் பிறகு அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது. ஆனாலும் அரபி மற்றும் உருது மொழி துறைகள் தொடர்ந்து இயங்க வழிவகை செய்யப்பட்டது. தற்போது தமிழக அரசு இக்கல்லூரிகளில் உள்ள அரபி மற்றும் உருது காலிப் பணியிடங்களை நிரப்பாமல் அத்துறைகளை நிரந்தரமாக மூடுவதற்கு வழிவகுத்துள்ளது சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள வரலாற்று ரீதியான அநீதியாகும்.
தமிழக சட்டமன்றப் பேரவையில் கடந்த 17.4.2012 அன்று நான் உரையாற்றும் போது அரசு உதவி பெறக்கூடிய கல்லூரிகளிலே உருது பேராசிரியர் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் இருக்கின்றன என வலியுறுத்தி பேசினேன். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதிமொழி அளித்து 4 ஆண்டுகள் கழிந்த பிறகும் இதே நிலை நீடித்து வருவது வருந்தத்தக்கது.
எனவே, அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள உருது, அரபி உள்ளிட்ட சிறுபான்மையின மொழித் துறைக்கான பேராசிரியர் காலிப் பணியிடங்களை தமிழக அரசு உடனடியாக  நிரப்ப வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
எம்.எச்.ஜவாஹிருல்லா
தலைவர், மமக

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news