இளைப்பாறிவிடாதே மகளே..,

இளைப்பாறிவிடாதே மகளே..,
Anithaaaஇளைப்பாறிவிடாதே மகளே
அதற்குள்
இருக்கின்றன கணக்குகள் நிறைய
அரசியல் செய்கிறோம் உன் மரணத்தை வைத்தென்றார்கள்
இதுதானா படிப்பதற்கு 
இல்லவே இல்லையா வேறெதுவும் 
என்றார்கள்
ஆயிரத்து நூற்றி எழுபத்தாறு எடுத்தவளால்
நீட் தேற முடியாதெனில் 
பாடத்தில் கோளாறென்றார்கள்
நீட்டைத் தேறியவனால் 
ஆயிரத்தி நூற்றி எழுபத்தியாறு எடுக்க முடியாதெனில்?
சாய்சில் விடுகிறார்கள் இதை 
எதையும் விடாது படித்து 
கரைகண்ட கனவான்கள்
தெரியுமா மகளே
நீட் எழுத உன் தம்பிகளும் தங்கைகளும்
தேசம் முழுக்க அலைந்த கதை?
கேள்விகள் தவறாம்
ஆனால் இழப்பீடு கிடையாதாம்
கண்டடைந்து விட்டார்கள் 
நம்மை ஒழிப்பதற்கான ஆயுதம் 
ஒன்றை
முளைக்கும் இனி
தவறான கேள்விகளுக்கான
பயிற்சி நிலையங்கள்
முடித்துவிடவில்லை எதையும் நாங்கள்
உன்னை இறுதியாய்க் குளிப்பாட்டியபிறகு
கருப்பும்
சிவப்பும்
நீலமும்
உன் பெயரால் களத்திலேனும் 
கரம் கோர்ப்போம்
அந்த அரசியலை 
நாங்கள்
செய்து முடிக்கும் வரை
மகளே
அருள்கூர்ந்து
இளைப்பாறி விடாதே.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news