சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க 10 டிப்ஸ்!

சமையல் எரிபொருளை சிக்கனமாகச் செலவழிக்க 10 டிப்ஸ்!

எரிபொருள்களை சிக்கனமாகப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புஉணர்வு வாகனத் தொடக்க விழா, சில நாள்களுக்கு முன்னால் சென்னையில் உள்ள இந்திய எண்ணெய் நிறுவனத்தில் நடைபெற்றது. அந்த விழாவில், எரிவாயுவைச் சிக்கனமாகச் செலவழித்து சமைப்பதற்குப் பெண்களுக்குப் பயிற்சி தரப் போவதாக அறிவித்திருந்தார்கள். அதற்கு முன்னால், இல்லத்தரசியும் சமையல் கலை நிபுணருமான அன்னம் அவர்கள், சமையல் எரிவாயுவை எப்படியெல்லாம் சிக்கனமாகப் பயன்படுத்தலாம் என்று டிப்ஸ் தருகிறார்.

1. நம்ம பாட்டிகள் காலத்திலிருந்து சமையலை சீக்கிரம் முடிக்க ஃபாலோ செய்கிற டிப்ஸ் இது. சமைப்பதற்கு அரை மணி நேரத்துக்கு முன்னாடியே அரிசியையும் பருப்பையும் ஊற வைத்து விடுங்கள். சீக்கிரம் வேகும், சமையல் எரிவாயுவும் மிச்சமாகும்.

2. அரிசி, பருப்பு, மட்டன், சிக்கன், பல காய் குழம்பு, இட்லி, பொங்கல், கடலைக்குழம்பு என்று எந்தெந்த சமையலுக்கெல்லாம் பிரஷர் குக்கரைப் பயன்படுத்த முடியுமோ அதற்கெல்லாம் குக்கரைப் பயன்படுத்துங்கள். பாத்திரத்தைவிட இதில் உணவுப்பொருள்கள் சீக்கிரம் வேகும். கேஸ் மிச்சமாகும்.

3. பொரிக்க வேண்டிய உணவுகளை, மசாலாவில் புரட்டியெடுத்து உடனே பொரிப்பதைவிட, மசாலாவில் நன்கு ஊற வைத்துப் பொரித்தால், சட்டென்று வேகும். கேஸ் மிச்சமாகும்.

4. வதக்கும்போதே பாதி வெந்துவிடுகிற காய்கறிகளை, மூடிப் போட்டு வேக வைத்தால் அந்த ஆவியிலேயே முழுதாக வெந்துவிடும். பாகற்காய் போல கொஞ்ச நேரம் வேக வைக்க வேண்டிய காய்கறிகள் என்றால், அளவாகத் தண்ணீர் வைத்து, மூடி விடுங்கள். அளவுக்கு அதிகமான தண்ணீர் வைத்தால், காய் வெந்த பின்னும் அதில் இருக்கிற தண்ணீர் வற்றும் வரை சமையல் எரிவாயுவைச் செலவழிக்க வேண்டி வரும்.

5. பாத்திரங்களில் துளிகூட ஈரமில்லாமல் சுத்தமான துணியால் துடைத்துவிட்டு அடுப்பில் ஏற்றினால், சட்டென்று சூடாகும். தினசரி இப்படிச் செய்யும்போது, இதிலும் சிறிதளவு கேஸ் மிச்சமாகும்.

6. சமைப்பதற்கு முன்னால் தாளிக்கும் சாமானிலிருந்து நறுக்கிய காய்கறிகள்வரை பக்கத்தில் எடுத்து வைத்துக்கொண்டு சமையுங்கள். அடுப்பில் வாணலியை வைத்துவிட்டு, வதக்குவதற்கு வெங்காயத்தை நறுக்க ஆரம்பிக்காதீர்கள்.

7. சமைக்கிற பொருளின் அளவுக்கு ஏற்றபடி, பாத்திரங்களைத் தேர்ந்தெடுங்கள். சிறிதளவு சமைக்க பெரிய பாத்திரங்களைப் பயன்படுத்தினால், அது சூடாக நேரம் பிடிக்கும். இதனாலும் கேஸ் வீணாகும்.
8. நூடுல்ஸ், பாஸ்தா போன்றவற்றைத் தண்ணீர் கொதித்த பிறகு போட்டு, மூடி போட்டு வேகவைத்தால் சீக்கிரம் வெந்துவிடும். சாதத்தை வடித்துத்தான் சாப்பிடுவீர்கள் என்றால், உலை தண்ணீரை அளவாக வைத்து மூடி விடுங்கள். சீக்கிரம் உலை கொதித்து, அரிசியும் சீக்கிரம் வேகும்.

9. பால் காய்ச்ச, கேஸ் ஸ்டவுக்குப் பதில் கெட்டிலைப் பயன்படுத்தலாம். சமைத்ததை மறுபடியும் சூடு செய்ய கேஸ் ஸ்டவ்வைப் பயன்படுத்துவதைவிட, இன்டக்‌ஷனில் செய்தால் சமையல் கேஸை மிச்சம் பிடிக்கலாம்.

10. ஃபிரிட்ஜில் வைத்த பாலை காய்ச்சுவதற்கு முன்னால், ஃபிரிட்ஜில் இருக்கிற மாவில் இட்லி ஊற்றுவதற்கு முன்னால், அவற்றை 2 மணி நேரத்துக்கு முன்னரே வெளியில் எடுத்து வைத்துவிட்டால், சமைப்பதற்கு அதிகமாக கேஸ் செலவழியாது. ஃபிரிட்ஜிலிருந்து எடுத்து உடனே சமைத்தால் ஜில்னெஸ் போகிற வரைக்கும் சூடு செய்ய வேண்டி வரும்.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news