பண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது ?

பண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது ?

மார்க்சியப் பொருளாதாரப் போதனையில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.


அ.அனிக்கின்

மார்க்ஸ் முதலாளித்துவ மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிச் செய்த விமர்சன ஆராய்ச்சியின் மூலம் இந்தத் தத்துவத்தை உருவாக்கினார். எல்லாப் பண்டங்களும் ஒரு அடிப்படையான குணாம்சத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே மனிதனுடைய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள். இந்த உழைப்பின் அளவுதான் அந்தப் பண்டத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது.

ECONOMICஒரு கோடரியைச் செய்வதற்கு ஐந்து உழைப்பு மணி நேரமும், ஒரு மண்பானையைச் செய்வதற்கு ஒரு மணி நேரமும் செலவிடப்பட்டால், மற்றவை எல்லாம் சமமாக இருக்கும் பொழுது, கோடரியின் மதிப்பு பானையின் மதிப்பைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு கோடரிக்குப் பரிவர்த்தனையாக ஐந்து பானைகள் கொடுக்கப்படுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ள முடியும். இது பானைகளின் மூலமாகச் சொல்லப்படும் கோடரியின் பரிவர்த்தனை மதிப்பு.

இதை இறைச்சி, துணி, அல்லது வேறு எந்தப் பண்டத்தின் மூலமாகவும் சொல்ல முடியும்; அல்லது கடைசியில் பணத்தின் மூலமாகவும், அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு வெள்ளி அல்லது தங்கத்தின் மூலமாகச் சொல்ல முடியும். ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு பணத்தின் மூலமாக எடுத்துரைக்கப்படும் பொழுது அது அதன் விலை எனப்படும்.

உழைப்பு என்பது மதிப்பைப் படைக்கின்ற ஒன்று என்ற பொருள் விளக்கம் மிக முக்கியமானது. கோடரிகளைத் தயாரிப்பவரின் உழைப்பை பானைகளைச் செய்பவரின் உழைப்போடு ஒப்பிட வேண்டுமென்றால், அதை ஒரு குறிப்பிட்ட தொழிலின் ஸ்தூலமான வகையைச் சேர்ந்த உழைப்பாகக் கருதக் கூடாது; ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு நபரின் கருத்துச் சக்தியையும் உடற்சக்தியையும் செலவு செய்வதாக மட்டுமே கருத வேண்டும்; அதாவது ஸ்தூலமான வடிவத்துக்குச் சம்பந்தம் இல்லாத சூக்குமமான உழைப்பாக மட்டுமே கருத வேண்டும். ஒரு பண்டத்தின் பயன் மதிப்பு (உபயோகம்) அதனுடைய மதிப்பைக் காட்டும் அவசியமான நிபந்தனை; ஆனால் அந்த மதிப்புக்கு அது தோற்றுவாயாக இருக்க முடியாது.

எனவே மதிப்பு புறவயமானதாக இருக்கிறது. அது ஒரு நபரின் உணர்ச்சிகளிலிருந்து சுதந்திரமானதாக, அந்தப் பண்டத்தின் உபயோகத்தை அவர் தன்னுடைய மனதில் எப்படி மதிக்கிறார் என்பதற்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கிறது. மேலும் மதிப்புக்கு ஒரு சமூகத் தன்மை இருக்கிறது. ஒரு நபருக்கும் ஒரு பண்டம், பொருளுக்கும் இடையே உள்ள உறவின் மூலம் அது நிர்ணயக்கப்படுவதில்லை; தங்களுடைய உழைப்பின் மூலம் பண்டங்களை உருவாக்கி அந்தப் பண்டங்களைத் தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்கின்ற மக்களுக்கிடையே உள்ள உறவின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தக் கொள்கைக்கு மாறாக, நவீன முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பண்டங்களின் அகவய உபயோகமே மதிப்பின் ஆதாரம், அடிப்படை என்று கருதுகிறது. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு அந்தப் பண்டத்தை நுகர்வோனின் விருப்பத்தின் தீவிரத்திலிருந்தும் அந்தக் குறிப்பிட்ட பண்டம் சந்தையில் கிடைக்கின்ற அளிப்பு நிலையிலிருந்தும் ஏற்படுகிறது. எனவே அது தற்செயலானதாக, ”சந்தை” மதிப்பு எனவாகிறது. மதிப்புப் பிரச்சினை தனிப்பட்ட மிகு விருப்பத் துறைக்கு ஒதுக்கப்படுவதால், இங்கே மதிப்பு அதன் சமூகத் தன்மையை இழந்து விடுகிறது; அது மக்களுக்கிடையே உள்ள உறவு என்பது போய்விடுகிறது.

மதிப்புத் தத்துவம் அதனளவில் மட்டும் முக்கியமானதென்று நினைக்கக் கூடாது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்திலிருந்து நாம் அடைகின்ற முக்கியமான முடிவு உபரி மதிப்புத் தத்துவமாகும். முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுகின்ற செயல் முறையை இந்தத் தத்துவம் விளக்குகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பில் கூலி உழைப்பாளியால் உருவாக்கப்பட்டு ஆனால் முதலாளியினால் கூலி கொடுக்கப்படாதிருக்கும் பகுதியின் மதிப்பு உபரி மதிப்பு எனப்படும். முதலாளி அந்தப் பகுதிக்குக் கூலி கொடுக்காமலே தனக்கென ஒதுக்கிக் கொள்கிறார்; முதலாளி வர்க்கத்தின் லாப வேட்டையின் ஆதாரம் இதுவே. முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் உபரி மதிப்பைப் படைப்பதே. இதை உற்பத்தி செய்வதே முதலாளித்துவத்தின் பொதுப் பொருளாதார விதி. உபரி மதிப்பில்தான் பொருளாதார முரணியலின், முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள வர்க்கப் போராட்டத்தின் மூல வேர்கள் இருக்கின்றன.

Economic-politc-Surplusமார்க்சியப் பொருளாதாரப் போதனையின் அடிப்படை என்ற முறையில் உபரி மதிப்புத் தத்துவம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதையும் ஆழமடைவதையும் கடைசியில் அதன் வீழ்ச்சியையும் நிரூபிக்கிறது. மார்க்சியத்துக்கு எதிராக முதலாளித்துவ அறிஞர்களின் தாக்குதல்கள் பிரதானமாக உபரி மதிப்புத் தத்துவத்தை நோக்கியே திருப்பப்படுகின்றன. மதிப்பைப் பற்றிய அகவயத் தத்துவமும் அதனோடு தொடர்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மற்ற கருத்துக்களும் சுரண்டலையும் வர்க்க முரண்பாடுகளையும் கோட்பாட்டளவில் ஒதுக்குகின்றன.

கடந்த 2,400 வருடங்களாக நடைபெற்றுவரும் ஒரு விவாதத்தை இது விளக்கிக் காட்டுகிறது. அரிஸ்டாட்டில் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தொலைவில் நின்று கொண்டாவது ஆதரித்தாரா? அல்லது ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பை அதன் உபயோகத்தைக் கொண்டு கணக்கிடுகிற கொள்கைகளுக்கு அவர் முன்னோடியா? அரிஸ்டாட்டில் மதிப்புத் தத்துவம் ஒன்றை முழுமையாக உருவாக்கவில்லை என்பதனால்தான் இந்த விவாதம் ஏற்படுகிறது; அத்தகைய தத்துவத்தை அவர் உருவாக்கியிருக்கவும் முடியாது.

அவர் பரிவர்த்தனையில் பண்ட மதிப்புக்களின் சமன்பாட்டைக் கண்டார்; அந்த சமன்பாட்டுக்குப் பொது அடிப்படை எது என்று தீவிரமாகத் தேடினார். அவருடைய சிறப்பான சிந்தனையின் ஆழத்தைக் காட்டுவதற்கு இது மட்டுமே போதும்; அவருக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பொருளாதார ஆராய்ச்சியின் திருப்புமுனையாக இது இருந்தது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் மிகமிக ஆரம்ப வடிவத்தைப் போன்ற சில கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.

மேலே தரப்பட்ட பகுதியில் பொலியான்ஸ்கி குறிப்பிடுவது இந்தக் கருத்துக்களாகவே இருக்க வேண்டும். ஆனால் அவர் மதிப்புப் பிரச்சினையை அறிந்திருந்தார் என்பது இதைக் காட்டிலும் முக்கியமானதாகும். நிக்கமாகஸிய அறவியல் என்ற புத்தகத்திலுள்ள பின்வரும் பகுதியில் இதைக் காணலாம்:


நிக்கமாகஸிய அறவியல் நூல்

”ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கிடையில் உதாரணமாக இரண்டு மருத்துவர்களுக்கிடையே – எந்த வியாபாரமும் நடப்பதில்லை; ஆனால் ஒரு மருத்துவருக்கும் விவசாயிக்கும் இடையே நடைபெறுகிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் வெவ்வேறானவர்கள், சமமாக இல்லாதவர்களுக்கிடையில் அது நடைபெறுகிறது; ஆனால் பரிவர்த்தனை ஏற்படுவதற்கு முன்பாக இவர்கள் சமப்படுத்தப்பட வேண்டும்… அதனால்தான் எல்லாவற்றுக்கும் ஒரே அளவுகோல் அவசியமாகிறது… அப்படியானால், இனங்கள் சமப்படுத்தப்பட்ட பிறகு சரிசமமாகத் திருப்பிக் கொடுப்பது சாத்தியமாகும். அது பின்வரும் அளவு விகிதத்தில் இருக்கும்:

விவசாயி : செருப்புத் தயாரிப்பவன் = செருப்புத் தயாரிப்பவனின் உற்பத்திப் பொருள் : விவசாயியின் உற்பத்திப் பொருள்.”(1)

இங்கே மதிப்பு என்பது வெவ்வேறான பயன் மதிப்புக்களைக் கொண்டிருக்கும் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர்களுக்கிடையே உள்ள சமூக உறவு என்ற பொருள் விளக்கம் கரு வடிவத்தில் இருக்கிறது. இதிலிருந்து விவசாயியும் செருப்புத் தயாரிப்பவரும் ஒருவருக்கொருவர் ஒரு மூட்டை தானியத்தையும் ஒரு ஜோடி செருப்பையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரத்தை, உழைப்பின் அளவைக் கொண்டு உறவு கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு ஒரே ஒரு காலடி எடுத்து வைத்தால் போதும் என்று தோன்றும். ஆனால் அரிஸ்டாட்டில் இந்த முடிவுக்கு வரவில்லை.

அவரால் ஏன் இந்த முடிவுக்கு வரமுடியவில்லை என்றால் அவர் பண்டைக் காலத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகத்தில் வாழ்ந்தார். அந்த சமூகத்தின் இயல்பே சமத்துவம் என்ற கருத்துக்குப் புறம்பானது, எல்லா வகையான உழைப்புகளும் சமமான மதிப்புடையவை என்ற கருத்துக்குப் புறம்பானது. உடல் உழைப்பு அடிமைகள் செய்ய வேண்டிய உழைப்பு என்று இழிவாகக் கருதப்பட்டது. கிரீஸில் சுதந்திரமான கைவினைஞர்களும் விவசாயிகளும் இருந்தபோதிலும், சமூக, உழைப்புக்குப் பொருள் விளக்கம் தரும் பொழுது அரிஸ்டாட்டில் அவர்களைப் “பார்க்கத் தவறியது” விசித்திரமானதே.

எனினும் மதிப்பை (பரிவர்த்தனை மதிப்பை) மூடியிருக்கும் துணியை அகற்றத் தவறிவிட்ட அரிஸ்டாட்டில் வேதனைப் பெருமூச்சு விட்டபடி இந்த மர்மத்துக்கு விளக்கத்தைத் தேடி பண்டங்களின் உபயோகத்தில் இருக்கின்ற குணவேறுபாடு என்ற மேலெழுந்தவாரியான உண்மைக்கு வந்து சேருகிறார். இந்தக் கருத்தின் (”எனக்கு உன்னிடமிருக்கும் பண்டம் வேண்டும்; உனக்கு என்னிடமிருக்கும் பண்டம் வேண்டும். எனவே நாம் பரிவர்த்தனை செய்து கொள்கிறோம்” என்று அதைக் கொச்சையாகச் சொல்லலாம்) அற்பமான தன்மை , அளவு ரீதியில் அது தெளிவில்லாமல் இருப்பது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும். எனவே பணம் பண்டங்களை ஒப்பிடக் கூடியவைகளாக்குகிறது என்கிறார்.

“எனவே எல்லாப் பொருள்களையும் ஒப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்று தேவைப்படுகிறது …. இப்பொழுது அவற்றுக்கு உண்மையாகவே தேவை ஏற்படுவது இதனால்தான். இந்த வியாபாரங்களின் பொதுவான இணைப்பு இதுதான்…… பொதுவான உடன்பாட்டின் மூலம் பணம் தேவையின் பிரதிநிதியாகிறது.”(2)

இது அடிப்படையாகவே மாறுபட்ட நிலையாகும். அதனால்தான் நாம் மேலே மேற்கோள் காட்டிய பேராசிரியர் பெல் கருத்துக்கள் போன்றவை சாத்தியமாகின்றன.

Leave a comment

Your email address will not be published.

*
Hit Counter provided by technology news